மங்கரசுவளையபாளையம்-சூரப்பநாயக்கன் குட்டை பாறைக்குழி

அமைவிடம் - மங்கரசுவளையபாளையம்-சூரப்பநாயக்கன் குட்டை பாறைக்குழி
ஊர் - மங்கரசுவளையபாளையம்
வட்டம் - ஈரோடு
மாவட்டம் - ஈரோடு
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2020
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

திரு.முடியரசு, திரு. வெள்ளியங்கிரி, திரு.ஆனந்தன்

விளக்கம் -

மங்கரசுவளையபாளையத்தில் உள்ள பெருங்கற்காலச்சின்னத்தின் கீழ்ப்பகுதியில் 3 கற்கள் அருகருகே நிலையாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கற்கள் சுமார் 2 அடி உயரம் கொண்டவை ஆகும். இதன் மேற்பரப்பில் சுமார் 2 டன் எடையுள்ள பிரம்மாண்டமான பெருங்கல் நிலையாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பெருங்கல்லின் மேற்புரம் வட்டவடிவில் உள்ளது. மேற்பரப்பு 11 அடி விட்டமும் கீழ்ப்பகுதி 5.5 அடி விட்டமும் உடையதாகும். மேலே விரிந்தும் கீழே குறுகியும் உள்ள தலைகீழான கூம்பு வடிவில் பெருங்கல் காட்சி அளிக்கின்றது. சிறு குன்றின் பாறைப் பகுதியில் நிறுத்தப்பட்ட இந்த பிரம்மாண்டமான பெருங்கற்காலச் சின்னம் பார்ப்பதற்கு வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. பெருங்கற்கால முன்னோர்கள் பலரின் கூட்டு உழைப்பால் மட்டுமே இது சாத்தியம் எனப் புலனாகிறது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற ஒழுங்கற்ற வடிவ அதிக எடையுள்ள பிரம்மாண்டமான சின்னங்கள் உள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் கண்டறியப்பட்ட இந்த மிகப்பழமையான சின்னம் கொங்கு பகுதி வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இது தொப்பிக்கல் வகை போலத் தெரிந்தாலும் உண்மையில் இந்த சின்னமானது கல்திட்டைகளின் ஆரம்ப வகை என்றும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தொல்லியல் அறிஞர் தி.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்திருக்கிறார். குறிஞ்சி நில மனிதர்கள் அதாவது மலைகள் மற்றும் குன்றுகளில் வசித்த பெருங்கற்கால மனிதர்கள் பாறைகளின் மேல் ஏற்படுத்திய பெருங்கற்கால சின்னங்களின் முன்னோடியாக இந்த பெருங்கல் சின்னத்தைக் கருதலாம் என்றும் கொங்கு மண்டலத்தில் காணப்பட்டுள்ள அரிய வகைச் சின்னம் இதுவே ஆகும் என்று தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வறிஞர் பூங்குன்றன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.முடியரசு, திரு. வெள்ளியங்கிரி, திரு.ஆனந்தன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

ஈரோடு அருகே, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தூக்கிவெச்சான் பாறை என்னும் பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருங்கற்கால மனிதர்களின் இனக்குழுத் தலைவர்கள் மற்றும் இறந்த முன்னோருக்கான நினைவுச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு பழங்காலத்தில் எழுப்பப்பட்டன. அவ்வகையில் ஈரோடு அருகே மங்கரசுவளையபாளையத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த தூக்கிவெச்சான்பாறை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் பெருங்கற்சின்னம் தனித்துவமானது.